அறிவர் மருத்துவத்தில் நாடி -1
அறிவர் மருத்துவத்தில் நாடி
(Pulse diagnosis in siddhar's medicine)
நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கும் பொழுது சித்தமருத்துவம் செய்கிறேன் என்று கூறினால் போதும் நாடி பார்க்க தெரியுமா? என்பது அடுத்ததாக வரும் கேள்வி.அப்படி சித்தமருத்துவரை அடையாளம் காட்டுவதாக நாடி உள்ளது. அந்த நாடி பார்ப்பதை மாயாவி வித்தையாக பலர் கருதுகின்றனர்.
நாடி பார்ப்பது அறிவுகலை சார்ந்தது.நாடியில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளது என்பது பொது மக்களுக்கு தெரிந்தால் தான் அது எவ்வளவு நுணுக்கமானது என்பது புரியும். நாடி பார்க்க மருத்துவரை நாடி வருவர். அப்பேற்பட்ட நாடியில் இருக்கும் பல்வேறு பிரிநிலைகளை நூல்கள் ஆராய்ச்சி மூலம் வெளிப்படுத்துவதே இப்பதிவின் நோக்கமாக கொண்டு வெளிப்படுத்துகிறோம்.
நாடி பார்ப்பதில் பல்வேறு பாரம்பரியங்கள் இருப்பதாக தோன்றுகிறது. பொதுவாக அனைவரும் அறிந்தது கரநாடியை பிடித்து மூன்று பிரிவாக பிரித்து அதை வாதம் பித்தம் கபம் எனும் முத்தா துக்களை அறிந்து நோய் நிலையை கூறுவது. ஆனால் சித்த மருத்துவம் இதோடு முடிந்துவிடவில்லை. அது பல்வேறு கூறுகளாக நாடி பரிசோதனையை கொண்டுள்ளது. எவ்வாறு ஒரு பூவின் இதழ்கள் பூத்தளத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அவ்வாறு பூ இதழ்கள் பல இருந்தாலும் அவை ஆரம்பிக்கும் இடம் ஒன்று என்பதுபோல,நாடி பல்வேறு நிலைகளில் பார்த்தாலும் அவை சென்றடையும் இடம் நோய் ஒன்று மட்டுமே.
அவ்வாறு இருக்கும் நாடி பூ இதழ்கள் என்னென்ன என்பதை காணலாம்.
1.உவமை முறை நாடி பரிசோதனை
இந்த உவமை முறை நாடி பல வருடங்களுக்கு முன்பே விளக்கப்பட்டிருக்கிறது.அதாவது கிரேக்க நாட்டை சேர்ந்த காலன் என்பவர் ஒரு தலை சிறந்த மருத்துவர் அவர் தான் உணர்ந்த நாடிகளை கீழ்கண்டவாறு விளக்கியுள்ளார்.
1. எலியைப் போன்ற நாடி(pulsus myurus)
2.எறும்பு ஊர்வது போன்ற நாடி(pulsus formicans)
3.வெள்ளாடு துள்ளுவதை போன்ற நாடி (pulsus dercadisans)
4.எழும்பியும்
அழுந்தியும் காணும் நாடி (pulsus fluctuosus)
இவைகளில் கேலன் என்பவர் மூன்று வகையாக நாடியை பிரிக்காமல் ஒற்றை நாடியில் தான் உணர்ந்த விடயத்தை விளக்க இச்செய்தியை கூறியுள்ளார். அவர் நான்கு நாடி பேதங்களை மட்டும் உணர்ந்துள்ளார். ஆனால் நாடி இன்னும் ஆழமானது. இதுபோன்ற முறை நம் சித்தர்கள், மூன்று நாடிகளை பல்வேறு விலங்கு பறவைகளின் நடைகளோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். அவைகளுள் அன்ன நடை, பாம்பு நடை, அட்டை நடை, தவளை நடை, குதிரை நடை, விட்டில் நடை, பம்பரம்போல் ஓடல்,மயில் போல் செம்போத்து போல்,எறும்பு போல் தேள் கொடுக்கை போல், வெட்டுண்ட அரணை வால் போல் இன்னும் பல.
இதற்கு நல்ல ஓர்மை தன்மை இருக்க வேண்டும்.
2. முக்குற்ற நாடி பரிசோதனை
இது மிக எளிய வகை பரிசோதனை வாத பித்த கப நாடி மூன்றில் எது கூடி உள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்ற மருத்துவத்தை செய்தல்.
இதற்கு முக்குற்றம் பற்றிய ஆழ்ந்த ஞானம் வேண்டும்.
3. 10 வகை பகுப்பு பரிசோதனை
இதில் வாத பித்த கபங்கள் இன் ஏற்றத்தாழ்வை பொறுத்து பத்து வகையாக பிரித்து நோய்க்கு பரிகாரம் செய்வது,அதன் வகை
1.தனி வாதம் அதிகரித்தல்
2.தனி பித்தம் அதிகரித்தல்
3.தனி கபம் அதிகரித்தல்
4.வாதம் பித்தம் அதிகரித்தல்
5.வாத கபம் அதிகரித்தல்
6.பித்த வாதம் அதிகரித்தல்
7.பித்த கபம் அதிகரித்தல்
8.கபவாதம் அதிகரித்தல்
9.கபபித்தம் அதிகரித்தல்
10.வாத பித்த கபம் மூன்றும் அதிகரித்தல்
4. 12 வகை பகுப்பு பரிசோதனை
இது எளிய வழி மற்றும் தீவிரமான நோய் நிலைகளை கண்டறிய உதவும் நாடி முறை. அவற்றின் பகுப்பு
1.வாதம் முன்னோக்கி நடத்தல்
2.வாதம் பின்னோக்கி நடத்தல்
3.வாதம் வலப்பக்கம் நடத்தல்
4.வாதம் இடப்பக்கம் நடத்தல்
5.பித்தம் முன்னோக்கி நடத்தல்
6.பித்தம் பின்னோக்கி நடத்தல்
7.பித்தம் வலப்பக்கம் நடத்தல்
8.பித்தம் இடப்பக்கம் நடத்தல்
9.கபம் முன்னோக்கி நடத்தல்
10.கபம் பின்னோக்கி நடத்தல்
11.கபம் வலப்பக்கம் நடத்தல்
12.கபம் இடப்பக்கம் நடத்தல்
5. ஆறாதார கண்ணாடி முறை நாடி
இதில் வல இட கரங்களில் உள்ள நாடிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. உடலில் அறுசுவைகளில் எந்த சுவை அதிகரித்து உள்ளது என்று அறிந்து அதற்கு ஏற்ற உணவு முறைகளை கூறி மேலும் உடலில் உள்ள குணங்களையும் கூறி, உடலில் எந்த உடல் தாது அதாவது சாரம், செந்நீர், ஊன்,கொழுப்பு,எலும்பு,மூளை சுக்கிலம் போன்ற எந்த அடுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறும் முறை.
இது கந்தசாமி முதலியார் பாரம்பரியம் சார்ந்தது.இது எளிய வகை நாடி பரிசோதனை.
6. 9 வகை பிரிவு பரிசோதனை
இது மூன்று நாடிகளையும் மூன்றாக பிரித்து பார்க்கும் முறை.
அவை
1.வாதத்தில் வாதம்
2.வாதத்தில் பித்தம்
3.வாதத்தில் கபம்
4.பித்தத்தில் வாதம்
5.பித்தத்தில் பித்தம்
6.பித்தத்தில் கபம்
7.கபத்தில் வாதம்
8.கபத்தில் பித்தம்
9.கபத்தில் கபம்
என்று பிரித்து பார்க்கும் முறை.
7.வற்ம நாடி பரிசோதனை
இது பல்வேறு நிலைகளில் உடலில் காயம் ஏற்படும் பொழுது காயம் பட்ட இடத்தை முக்குற்ற நிலைகளை பார்த்து கணிப்பது.
இம்முறை அனைத்தும் வற்ம நூல்களில் காணலாம்.
ஆனால் நூலுக்கு நூல் பல பிரிவுகள் வற்ம நாடி பரிசோதனையில் உள்ளது.
மேலும் இந்த நாடி மூலம் வாசி அடங்கியிருக்கும் இடம் உயிர் அடங்கியிருக்கும் இடங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள இயலும் ஆதலால் இது யோகபங்கம் ஏற்படும் நிலைகளில் அதை சரி செய்ய இந்த நாடிப் பரிட்சை பயன்படும். மேலும் அடிபட்டவர்களுக்கும் இம்முறை நாடிப்பரிட்சை நோய் தீர்க்க பயன்படும்.
8.சாம்பசிவம் பகுப்பு பரிசோதனை
சித்த மருத்துவ மாமேதைகளில் ஒருவரான T.V.Sambasivam pillai
அவர்கள் சித்த மருத்துவ நூல்களில் காணப்படும் ஒப்புமைகளை 16 வகையாக பிரித்துள்ளார்.அவை
1.அற்று ஓடல்- scarcely felt pulse
2.சிதறி ஓடல்- vibrating excessively unsteady pulse
3.சுழன்று காணல்-whirling pulse
4.உதறி நிற்றல்-agitated pulse
5.கதிப்போடு துடித்து நிற்றல்-rapid pulse with strong vibrations
6.அழுந்தி நிற்றல்-sinking pulse
7.தணிந்து தளரல்- becoming weak pulse
8.துரிதமாய் ஓடல்-rapid or abrupt pulse
9.மாறி ஓடல்-irregular pulse
10.நடுங்கி ஓடல்-small ,feeble,tremulus pulse
11.இரண்டுற ஓடல்-pulse with 2 beats following each other
12.அடுத்து அடுத்து ஓடல்-beating intermittently pulse
13.விரிந்து ஓடல்-pulse with expansion in beat.
14.கூர்மையாய் ஓடல்-sharp pulse
15.புழுபோலூந்தால்-pulse with worm like movement
16.வலித்து ஓடல்-pulse with stretching movement.
இந்த பகுப்புமுறை அறிந்த பின்பு சித்த மருத்துவ நாடிநூல்களை படித்தால் விரைவில் மனதில் பதியும்.
9.சிறப்பு நாடி பரிசோதனை
மேலும் சிறப்பு நாடிகளான
1.கர்ப்ப நாடி(pulse during various stage of pregnancy)
2.மரண நாடி (pulse to diagnose whether a person live or die,when the person will die)
ஆகியவை சித்தர் நூலில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
மேற்கண்ட அனைத்தும் நூல்களில் கண்டவை.இதைத்தாண்டி அனுபவ முறை நாடிகள் பல நூல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நூல்களில் வெளிப்படுத்தாதவை சில,
1. 13 முறை பகுப்பு பரிசோதனை
இது அர்ஜுனன் ஐயா அவர்களின் பாரம்பரியத்தை சார்ந்த முறை இதில் நாடியை பதிமூன்றாக பிரித்து மேலும் கிட்டத்தட்ட 101 வகையாக மிக நுண்ணியமாக பிரித்து நாடி பார்க்கும் முறை இது சரியாக உடலின் எந்தப் பாகத்தில் நோய் உள்ளது என்பதை அறிய பயன்படுகிறது.
2.சோதிட நாடி பரிசோதனை
இது என் அனுபவத்தில் சோதிட அறிவையும், நாடி அறிவையும் கொண்டு செய்யப்பட்டது.
முன்னோர்கள் இம்முறையில் நாடி பார்த்திருக்கலாம், யாம் அறிந்தது இல்லை.
இதில் நாடி பார்த்து எந்த கோள்களின் நிலை பாதிக்கப்பட்டுள்ளது,
அதன் காரகத்துவ கிரகம் எது? என்பதை அறிந்து பரிகாரம் செய்வது.
உதாரணமாக சனி கிரகம் வாத நாடியை குறிக்கும்.
சனி கிரகம் சுய ஜாதகத்தில் நீசம் அல்லது மறைவு பெருவோர்க்கு வாத நாடி இயல்பு நிலையில் நில்லாது.
இவர்களுக்கு சாந்தியாக சனி கிரகத்துக்கு உரிய எள்ளெண்ணை சேர்ந்த மருந்துகள் போன்றவை கொடுத்து மருத்துவம் செய்யும் போது நல்ல பலன் காண முடியும்.
ஆயுள்அறிவர் மருத்துவமாகிய சோதிட நாடி மூலமாக இனி வரும் நோய்களையும் அறிய வழிவகை உண்டு.சோதிட நாடி பற்றி இனிவரும் காலங்களில் விளக்கமாக காணலாம்.
இவை அல்லாமல் பல நாடி பரிசோதிக்கும் முறைகள் இருக்கலாம். அவை தங்களுக்கு தெரிந்திருந்தால் கீழே கமெண்டில் பதிவிடவும்.
நன்றி
உங்கள் அன்பு மருத்துவன்
இரா.சண்மு
நாடியை பற்றிய சில விஷயங்களை உங்கள் பதிவு மூலமாக நான் தெரிந்துகொண்டேன்.....
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி தோழரே
Deleteநல்ல ஆராய்ச்சி நோக்கு
ReplyDeleteநன்றி ஐயா🙏
Delete