சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1

        ஒரு சித்தரை பற்றி முழுமையும் அறிந்துகொள்ள அவர் இயற்றிய நூல்கள் நமக்கு கைகொடுக்கின்றன. அவ்வாறு இன்று சிவவாக்கியர்  பற்றி அறிய அவர் இயற்றிய நூல்கள் என்ன என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.இன்றைய காலகட்டத்தில் முழுமையான எந்த ஒரு ஆராய்ச்சியும் இல்லாமல் சித்தர்களைப் பற்றிய தவறான பல செய்திகள் முகநூலிலும் யூடியூப் போன்ற வலைதளங்களிலும் வெளிவந்து கொண்டுள்ளன.


இந்தப்பதிவில் சிவவாக்கியர் இயற்றிய நூல்கள் என்னவென்று காண்போம். 

அனைவரும் அறிந்திருப்பது, சிவவாக்கியச் சித்தர் இயற்றிய ஞானயோக புரட்சி பாடல்கள்; பெரிய ஞானக் கோவையில் வெளிவந்த 520 பாடல்கள் மட்டுமே.அதைத் தாண்டி சில நூல்கள் வெளிவந்துள்ளன.அதை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


1.சிவவாக்கியர் பாடல்கள் 500


1927ஆம் ஆண்டு பெரிய ஞானக் கோவையில் ஒரு பகுதியாக சிவவாக்கியர் பாடல்கள் மொத்தம் 518 பாடல்களுடன் விளக்க உரை இன்றி வெளிவந்து உள்ளது. அதே  பெரிய ஞானக் கோவையின் 2016ஆம் ஆண்டு பதிப்பில் 550 சிவவாக்கியர் பாடல்கள்  வெளிவந்துள்ளது.


அது போல 1933 ஆம் ஆண்டு மாங்காடு வடிவேலு முதலியார் அவர்களால் 519 பாடல்கள் *விளக்கவுரையுடன்* இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ் பதிப்பின் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.இருந்தும் அந்த விளக்கவுரை திருப்திகரமாக இல்லை. இது பெரிய சிவவாக்கியர் பாடல் என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.



2. சிவவாக்கியம் 1000


1000 பாடல்களைக் கொண்ட நூலினை சிறுமணவூர் முனுசாமி முதலியார் அவர்கள் 1903 ஆம் ஆண்டு சிவகாமி விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பித்தார்.இதில் மருத்துவ செய்திகளும் பெருமருந்தும் அடக்கம்.

இதில் மேலே கூறிய 550 பாடல்களும் அடக்கம்.இதற்கு விளக்கவுரை இன்னும் வெளிவரவில்லை.



3.சிவவாக்கியர் நாடி 31


இந்நூல் பதினெண் சித்தர் நாடி சாஸ்திரம் என்னும் ஒரு நூலின் பகுதியாக வெளிவந்துள்ளது. இது வாத பித்த ஐயங்கள் பற்றிய ஞானத்தை கொடுக்கும் ஒரு நூலாக உள்ளது.




4. சிவவாக்கியர் 100


இது நூறு பாடல்களை மட்டுமே கொண்டுள்ளது. இது 1925ஆம் ஆண்டு பி.வே நமச்சிவாய முதலியார் அவர்களால் பதிக்கப்பட்டது. இந்த நூறு பாடல்களும் ஏற்கனவே பார்த்த ஆயிர பாடல்களில் அடக்கம்.




5.சிவவாக்கியர் அவத்தி எண்ணெய்


இது பதினெண் சித்தர் வைத்திய சிரோரத்ன நடன காண்டம் 1500 என்ற நூலில் நான்கு பாடல்கள் மட்டும் சிவவாக்கியர் இயற்றியதாக காணப்படுகிறது.



6.சிவவாக்கியர் 1200


இது பற்றிய தகவல் அகசான்றாக பஞ்சகாவிய நிகண்டு என்ற நூலில் உள்ளது.இந்த நூல் கிடைக்கவில்லை.

இதை சிவவாக்கியருடைய பெருநூலாக கருதலாம். சிவவாக்கியர் 1000 என்பது இந்த நூலின் பகுதியா என்பது ஆராயத்தக்கது.




7.சிவவாக்கிய மந்திரம்.

8.சிவவாக்கியர் குணவாகடம்.

9.சிவவாக்கியர் சூத்திரம் -33.


இந்த மூன்று நூல்களும் மின்னூல் ஆக்கப்பட்டதாக முன்சிறை சித்த மருத்துவர் மோகன்ராஜ் அவர்கள் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நூல்களின் பெருமை, பொருண்மை இவை வெளிவந்தால் தான் தெரியும்.


10.சிவவாக்கியர் விருத்தம்


இந்நூலினை சுபாஷினி(தமிழ் மரபு அறக்கட்டளை) அவர்கள் ராயல் லைப்ரரி,கோபென்ஹஜென் இல் இருந்து மின்னூல் ஆக்கி உள்ளதாக தமிழ் மரபு அறக்கட்டளை வலைத்தளத்தில் கூறியுள்ளார்.இவை வெளிவந்தால் தான் இவை ஏற்கனவே வந்துள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும்.


இந்த நூல்கள் மேலும் விரிய வாய்ப்புள்ளது. உங்களுடைய பொன்னான கருத்துக்கள் மட்டும் சந்தேகங்களை பதிவிட்டு நூலாராய்ச்சியை வானம் தொட உதவுங்கள்.


நன்றி


Comments

Popular posts from this blog

அறிவர் மருத்துவத்தில் நாடி -1

காணாத நூல்கள் -3