சித்த மருத்துவ கனவுகளும் ,சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியில் இதழ்களும்

கனவு காணுங்கள் திட்டமிடுங்கள் செயல்படுத்துங்கள் என்னும் அப்துல் கலாமின் மொழிகள் எவராலும் மறக்க முடியாது.அவருடைய கனவாகிய "இந்தியா வல்லரசு நாடு" அனணவர் மனதிலும் பதிந்த ஒரு பதிவு. அனைவருடைய கனவும் அதுவே. 

அவர் இல்லை என்றாலும் அவருடைய கனவு எல்லாருடைய மனதிலும் ஆழ்ந்து ஊன்றி உள்ளது. அப்துல்கலாம் நாட்டுக்காக கண்ட கனவைப் போல் சித்த மருத்துவத்திற்காக யாரும் கனவு காணவில்லையா? என்ற கேள்விக்கு சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி பதில் அளிக்க முன்வந்துள்ளது. 

  

          ஒரு துறையின் வளர்ச்சி பற்றிய செய்திகளை சேகரிக்க அத்துறை சார்ந்த இதழ்கள் மிகவும் பயன்படுகிறது. அவ்வாறு சித்த மருத்துவ முன்னோடிகள் கண்ட கனவுகளை இதழகள்(magazines) வாயிலாக சேகரித்து செயல்படுத்த வேண்டிய சூழ் நிலையில் இருக்கக்கூடிய நாம்,...2030ல் சித்த மருத்துவம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று புதிது புதிதாக கனவு காணும்படியாக போட்டிகள் நடப்பதாக முகநூலில் கண்ட ஒரு ஞாபகம். 

             நிலவில் ரசம் கந்தகம் தேடுதல் வேட்டை;நின்றால் சித்த மருத்துவம்; நடந்தால் சித்த மருத்துவம்;பறந்தால் சித்த மருத்துவம்; நாசாவின் பக்கத்து தெருவிலே சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கூடம்; நீருக்கு அடியில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கூடம் என்று பல கனவுகள் எல்லோரிடமும் கொட்டிக்கிடக்கிறது. நம் முன்னோர்கள் கண்ட கனவை நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் இது. அதை இக்கட்டுரையில் காண்போம்


நந்தி 1965 டிசம்பர் மாத இதழில் வெளிவந்தது


1. சித்த மருத்துவர்கள் தம்முடைய கடமை என்னவென்பதை தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.


2.யாரிடமாவது பழைய ஓலைச்சுவடிகள் இருந்தால் அவற்றை பிரசுரிக்க அரசாங்கத்திடம் கொடுக்கவேண்டும்.


3.அபூர்வமாக மருந்து இருந்தால் அதைப் பற்றி தமக்குள்ளேயே வீண் பெருமை பேசிக் கொண்டிராமல் பொது அரங்கில் கொண்டு வந்து அதன் குணத்தை விஞ்ஞான அறிவு ஆற்றல் உள்ளவர்கள் ஒப்புக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.


4.மூடநம்பிக்கை ஒழித்து சித்த வைத்திய ஆராய்ச்சி முன்னேற வேண்டும்.


5.எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை தனியார் துறையில் சித்த வைத்திய ஆராய்ச்சி நிலையம் ஒன்றாவது தமிழகத்தில் தொடங்கப்பட வேண்டும்.


6. தமிழ்நாட்டில் உள்ள பொருளாதார வசதியுள்ள கோயில்களில் இலவச சித்த வைத்திய சாலைகள் தொடங்கப்படவேண்டும்.


7. சித்த வைத்தியர்களின் பதிவு கட்டணத்தை அதிகரித்தல் கூடாது.


1967 ஆம் ஆண்டு முதல் சித்தன் என்னும் இதழில் வெளிவந்த கனவுகள்


8. மத்திய அரசினரின் நாட்டு மருத்துவ துறை ஆலோசகர் என்ற பதவியில் வீற்றிருக்கும் ஆயுர்வேத பட்டதாரிகள் தமிழ் மருத்துவ வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்கள். எனவே அப்பதவிக்கு சித்த மருத்துவ பட்டதாரிகளில் ஒருவர் தனி ஆலோசகராக நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


9.மத்திய மாநில அரசுகளின் சகல சுகாதார மருத்துவ குழு அமைப்புகளிலும் தமிழ் மருத்துவத்துறையை சேர்ந்த தமிழகப் பிரதிநிதிகள் இடம் பெறவேண்டும்.


10.சித்த மருந்துகளுக்கு என தனி ஆய்வுக் கூடங்களில் சோதனை கூடங்களையும் அமைப்பதுடன் அவற்றின் தலைமையகத்தை தமிழகத்தில் நிறுவ வேண்டும்.


11.தமிழ் பல்கலைக் கழகங்கள் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவ கல்லூரிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தி சேரும் மாணவர்களுக்கு தாராளமாய் உதவிப் பணமும் அளித்து ஊக்குவிக்க வேண்டும். கல்லூரியில் பட்டப்படிப்பில் குறுகிய கால டிப்ளமோ படிப்பும் நடத்த வேண்டும்.


12.தமிழ் மருத்துவ வளர்ச்சிக்கு என மத்திய அரசினர் அளித்துவரும் உதவித் தொகையை அதிகரிப்பதுடன் பெரும் தொகையை தக்க முறையிலும் தகுதியுடையோர் பயன்படுத்தும் வண்ணம் செயல்புரிய வேண்டும்.


13.மத்திய அரசு மருந்து கட்டுப்பாடு சட்டப்படி சுமார் 54 நோய்களின் பெயர்களை கூறி விளம்பரம் செய்யக்கூடாது என்று கூறுவது கண்டிக்கத்தக்கதாகும் மேற்கண்ட நோய்களை தமிழ் மருத்துவ முறையில் நிச்சயமாக தீர்க்க இயலுமாகவே அந்தப் பிரிவில் சித்த மருத்துவ முறைக்கு விதிவிலக்கு அளிக்க மத்திய அரசை தூண்டுமாறு வேண்டுகின்றோம்.


14.மாவட்ட தலைநகர்களில் படுக்கை வசதிகளுடன் கூடிய தனி சித்த மருத்துவமனை அமைக்க வேண்டும். மேலும் நகர பஞ்சாயத்து தேவஸ்தான மடாலயங்கள் ஆகியவற்றின் சார்பாக ஒவ்வொரு ஊரிலும் சித்த மருத்துவ கூடங்களை அமைத்து அதில் பதிவு பெற்ற மருத்துவர்களை நியமிக்க வேண்டும் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும்.


15.பள்ளிக்கூடங்கள்,கல்லூரிகளிலும் பாடப்புத்தகங்களிலும் சித்தர்களின் வரலாறு, சித்த வைத்தியத்தின் சிறப்பும், சித்தர்கள் நூலின் கவிதைகளும் இடம் பெறவேண்டும்.


இவை அனைத்தும் இரண்டு இதழ்களில் இருந்து எடுத்த செய்திகள் மட்டுமே. இதுபோல் பல இதழ்கள் உள்ளன. சித்த மருத்துவத்தில் கனவுகளுக்கு பஞ்சமில்லை கனவை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கும் நபர்களுக்குமே பஞ்சம்.ஆகையால் கனவை நிறைவேற்றும் போட்டிகள் ஏதேனும் நடந்தால் கீழுள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

சித்த மருத்துவ மாணவனின் பாடப்புத்தகத்தில் இந்த கனவுகள் இடம்பெறவேண்டும்.அதைப் படிக்கும்போது ஆர்வம் ஏற்பட்டு இந்த கனவை நிறைவேற்ற ஒரு மாணவன் ஆவது முன்வர வேண்டும்.

நம் முன்னோர்கள் கண்ட கனவை சிரமேற்கொண்டு கொண்டு செயல்படுத்தினோமென்றால் 50 வருட கால கனவும் நிறைவேறும் அடுத்த வருடம் புதிதாக கனவு காணும் போட்டி நடத்தி நம் கனவில் வெற்றிபெறவும் செய்யலாம்..

                                                            நன்றி.

Comments

Popular posts from this blog

சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1

அறிவர் மருத்துவத்தில் நாடி -1

காணாத நூல்கள் -3