காணாத நூல்கள் -4
அகத்தியர் பெருநூல் 10,000
காணாத நூல்கள் என்ற தலைப்பில் சித்த மருத்துவத்தில் நாம் தொலைத்த நூல்களை பற்றி பார்த்து வருகிறோம். நேரம் இருப்பதை பொருத்தும் அவசியம் கருதியும் பதிவு செய்து வருகிறேன்.
தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த சிறப்பு பதிவு
பொதுவாக சித்த மருத்துவ பொங்கல் சற்று வித்தியாசமாக இருக்கும். உதாரணமாக
போகி பண்டிகை
அந்த காலத்தில் பழைய நூல்களை எரித்து போக்கினோம். போகி கொண்டாடினோம்.ஆனால் இந்த நவ நாகரிக உலகத்தில் ஓலைச்சுவடிகளை DIGITAL PATENT கொடுத்தும், சித்த மருத்துவ நூல்களை ஆயுர்வேத நூல்களாக மாற்றியும்,வெளிநாட்டிடம் கொடுத்தும் நாம் நம் பாரம்பரிய நூல்களை போக்கி போகி பண்டிகை கொண்டாடுகிறோம்.
தமிழ் பொங்கல்
அதுபோல நம்மில் சிலர் தமிழ் மருத்துவம் பழமை வாய்ந்தது, தமிழ் மருத்துவம் சிறப்பு வாய்ந்தது மனிதர் தோன்றிய காலத்திலே தமிழ் மருத்துவம் தோன்றியது என்று தமிழின் பெருமையை பொங்கி பொங்கி கூறி பொங்கல் கொண்டாடுகிறோம்.
மாட்டுப் பொங்கல்
மாடு தான் என்றாலும் ஒரு போக்கு உண்டு மனிதருக்கோ அவ்வளவும் கிடையாது அப்பா என்பது அகத்தியர் வாக்கு.
அதாவது மாடு தன்னுடைய வேலைகளை ஒரே போக்குடன் செய்யும். தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருந்து விடும். அதுபோல் நம்மில் சிலரும் எது எப்படி போனால் என்ன நம்ம உண்டு நம்ம வேலை உண்டு அப்படின்னு இருந்து மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம்.
காணோம் பொங்கல்
இந்தக் காணோம் பொங்கல் என்னைப் போன்ற சிலர் மட்டும் இந்த நூல்களை காணவில்லை அந்த நூலை காணவில்லை என்று பொங்கி பொங்கி கொண்டாடுவார்.
சரி நாம் விஷயத்துக்கு வருவோம்.எந்த கிணத்த காணோம்.
சித்த மருத்துவத்தில் மிகவும் தலை சிறந்த நூல்களாக கருதப்படும் நூல்கள் 3
அவை
திருமந்திரம் 3000
போகர் 7000
அகஸ்தியர் பன்னிரண்டாயிரம்
இதில் அகத்தியர் 12000 முழுமையாக கிடைக்கப்பெறவில்லை 5000 பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன.அவை வெளிவந்து விட்டது.
அகஸ்தியர் பத்தாயிரம் என்ற நூல் அரசினர் சித்தமருத்துவ கல்லூரி பாளையங்கோட்டையில் ஓலைச்சுவடியாக இருப்பதாக நா. கந்தசாமி பிள்ளை , முன்னாள் சித்த மருத்துவ அறிவியல் மேம்பாட்டு குழு உறுப்பினர்,தனது History of siddha medicine என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
ஆனால் இதுவரை 10 ஆயிரம் பாடல்கள் உள்ள அகஸ்தியர் பெருநூல் வேறு எங்கும் கிடைக்கவில்லை, சித்த மருத்துவ கல்லூரி பாளையங்கோட்டையிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் நாம் மிகப் பாரம்பரியமான, பழமை வாய்ந்த, சிறப்பான, அருமை வாய்ந்த தமிழர் சொத்து ஒன்றினை சித்த மருத்துவ கல்லூரி பாளையங்கோட்டையில் தொலைத்து உள்ளோம் என்பதை உணர வேண்டும்.
History of siddha medicine என்ற நூல் 1979 இல் முதல் பதிப்பு செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. இதன் மூலம் 1979 க்கு பின்னர் தான் அகத்தியர் பெருநூல் பத்தாயிரம் என்ற நூலை நாம் தொலைத்திருக்க வேண்டும்.
இது மிகவும் கவலைக்கிடமான விஷயம் ஏனென்றால் இப்படிப்பட்ட நூல் விரைவில் அகஸ்தியர் ஆயுர்வேதம் 10000 என்றும் இல்லையென்றால் அகஸ்தியர் மகரிஷியின் 10000 என்றும் கூட வெளிவரலாம். நாம் அப்பொழுது அகஸ்தியர் மகரிஷி அல்ல அவர் சித்தர் நம் நூல்களை ஆரியர்கள் அபகரித்து விட்டனர் என்று நாம் கூறினால் உபயோகமற்றது.
இந்நூல் கிடைத்துவிட்டால் இது அகஸ்தியர் பன்னிரெண்டாயிரத்தில் ஒரு பாகமா என்று ஆராய்ச்சி செய்து வெளியிட ஏதுவாகும்.
நான் என்னுடைய காணோம் பொங்கலை உங்களுடன் கொண்டாடிவிட்டேன்.
உங்கள் யாருக்காவது இது பற்றிய செய்தியோ, ஓலைச்சுவடியோ இருந்தால் சித்த மருத்துவ சமூகத்துக்கு கொடுத்து உதவினால் இன்று காணோம் பொங்கலாக உள்ளது, நாளை சித்த மருத்துவ சமூகத்துக்கு காணும் பொங்கலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி உங்கள்
அன்பு மருத்துவன்,
இரா.சண்மு
நீங்கள் தேடும் நூல்கள் விரைவில் உங்களிடம் வந்து சேரட்டும். காணும் பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDelete